அறிவித்தல்

2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படிச் சட்டம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றமானது, அதன் கௌரவ சபாநாயகர் அவர்கள் 2016 மார்ச் 23 ஆம் திகதியன்று சான்றுப்படுத்தியதன் பேரில், 2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படிச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்பதைப் பொதுமக்களுக்கும், தொழிற் சங்கங்களுக்கும், தொழில்கொள்பவர்களுக்கும் இத்தால் அறியத்தருகிறேன். வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படிக் கொடுப்பனவை தொழில்கொள்பவர்கள் தமது வேலையாளர்களுக்கு பின்வரும் இரண்டு கட்டங்களாக வழங்கவேண்டும் என இச்சட்டம் ஏற்பாடு செய்கின்றது–

கட்டம்1– முதலாவது கொடுப்பனவு – சட்டத்தின் பிரிவு 3(1) – 2015 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

(அ)  ரூ. 1500/- பெறுமதியான மாதாந்தக் கொடுப்பனவானது, ரூ. 40,000/- அல்லது அதற்குக் குறைந்த மாதாந்த வேதனத்தை அல்லது சம்பளத்தைப் பெறுகின்ற வேலையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், தொழில்கொள்பவர் உரிய நாட்களுக்கு வேலை வழங்கத் தவறியமை காரணமாக அல்லாது, வேறேதும் காரணங்களுக்காக வேலையாளொருவர் ஒரு மாதத்தில் தேவைப்படுத்தப்படும் நாட்களுக்கு வேலை செய்யத் தவறியிருப்பின், அவ்வேலையாள் அம்மாதத்தில் வேலை செய்த நாட்களின் விகிதாசாரப்படி இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

(ஆ)நாளாந்தக் கொடுப்பனவைப் பெறும் வேலையாளொருவருக்கு, அவ்வேலையாளின் நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 1600/- இற்கு மேற்படாமலிருப்பின், குறித்த மாதமொன்றில் அவர் வேலை செய்யும் நாளொன்றுக்கு ரூ. 60/- என்ற வகையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

(இ)  துண்டுவீத அடிப்படையிலான வேலையாளொருவருக்கு, குறித்த மாதமொன்றில் அவருக்கு வழங்கப்படத்தக்க வேதனத்தின் அல்லது சம்பளத்தின் பதினைந்து (15) சதவீதமான தொகை என்ற வகையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த(அ), (ஆ), (இ) ஆகிய பந்திகளில் குறிப்பிடப்படும் கொடுப்பனவானது மாதமொன்றுக்கு ரூ. 1500/- ஐ விடவும் அதிகமாக இருத்தலாகாது.

(ஈ)  எந்தவொரு வேலையாளொருவரதும் மாதாந்த வேதனம் அல்லது சம்பளம் ரூ. 40,000/- ஐ விட அதிகமாகவும் அதேவேளை ரூ. 41,500/- ஐ விடக் குறைவாகவும் இருந்தால், அவர் பெறும் மாதாந்தம் பெறும் தொகைக்கும் ரூ. 41,500/- இற்கும் இடையிலான வித்தியாசமானது இக்கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும்.

(உ)  நாளாந்தக் கொடுப்பனவைப் பெறும் வேலையாளொருவருக்கு, அவ்வேலையாளின் நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 1600/- இற்கு அதிகமானதாகவும் அதேவேளை ரூ. 1660/- ஐ விடக் குறைவாகவும் இருந்தால், அவரது மாதாந்த வேதனத்தைக் கணக்கிட்டு, அவ்வேதனத்திற்கும் ரூ. 41,500/- இற்கும் இடையிலான வித்தியாசத்தின் இருபத்தைந்திலொரு (1/25) பங்கானது இக்கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும்.

 

கட்டம்2– இரண்டாவது கொடுப்பனவு – சட்டத்தின் பிரிவு 3(2) – முதலாம் கட்டக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

(அ)  ரூ. 1000/- பெறுமதியான மாதாந்தக் கொடுப்பனவானது, ரூ. 40,000/- அல்லது அதற்குக் குறைந்த மாதாந்த வேதனத்தை அல்லது சம்பளத்தைப் பெறுகின்ற வேலையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், தொழில்கொள்பவர் உரிய நாட்களுக்கு வேலை வழங்கத் தவறியமை காரணமாக அல்லாது, வேறேதும் காரணங்களுக்காக வேலையாளொருவர் ஒரு மாதத்தில் தேவைப்படுத்தப்படும் நாட்களுக்கு வேலை செய்யத் தவறியிருப்பின், அவ்வேலையாள் அம்மாதத்தில் வேலை செய்த நாட்களின் விகிதாசாரப்படி இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

(ஆ)நாளாந்தக் கொடுப்பனவைப் பெறும் வேலையாளொருவருக்கு, அவ்வேலையாளின் நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 1600/- இற்கு மேற்படாமலிருப்பின், குறித்த மாதமொன்றில் அவர் வேலை செய்யும் நாளொன்றுக்கு ரூ. 40/- என்ற வகையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

(இ)  துண்டுவீத அடிப்படையிலான வேலையாளொருவருக்கு, குறித்த மாதமொன்றில் அவருக்கு வழங்கப்படத்தக்க வேதனத்தின் அல்லது சம்பளத்தின் பத்து (10) சதவீதமான தொகை என்ற வகையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த(அ), (ஆ), (இ) ஆகிய பந்திகளில் குறிப்பிடப்படும் கொடுப்பனவானது மாதமொன்றுக்கு ரூ. 1000/- ஐ விடவும் அதிகமாக இருத்தலாகாது.

 

சட்டத்தின் பிரிவு3(3) – முதலாம் அல்லது இரண்டாம் கட்டத்தின் கீழ் அல்லது இரு கட்டங்களின் கீழ் வழங்கப்படத்தக்க கொடுப்பனவுகள், வேலையாளொருவரது மாதாந்த வேதனம் அல்லது சம்பளம் ஆகக்கூடியது ரூ. 41,500/- ஆக இருக்கும் வகையிலாக அமைந்திருக்கும்.

 

சட்டத்தின் பிரிவு3 இன் (4) ஆம், (5) ஆம் மற்றும் (6) ஆம் உப பிரிவுகள் – 2014 ஒக்தோபர், 1 ஆம் திகதிக்கும், 2015 ஏப்ரல், 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியினுள், ஒரு தொழில்கொள்பவர்  தமது வேலையாளருக்கு ஏதேனும் வேதன அல்லது சம்பள அதிகரிப்பை வழங்கியிருந்து, -

(அ)  அவ்வாறான அதிகரிப்புகளின் மொத்தத் தொகையானது, மேற்குறிப்பிட்ட முதலாம், இரண்டாம் கட்டங்களிலான கொடுப்பனவுகளிலும் பார்க்கக் கூடுதலானதாக இருப்பின், அத்தொழில்கொள்பவர் அக்கொடுப்பனவுகளிலிருந்து விலக்களிக்கப்படுவார்.

(ஆ)அவ்வாறான அதிகரிப்புகளின் மொத்தத் தொகையானது, மேற்குறிப்பிட்ட முதலாம், இரண்டாம் கட்டங்களிலான கொடுப்பனவுகளிலும் பார்க்கக் குறைவானதாக இருப்பின், அம்மொத்தத் தொகைக்கும் இரண்டு கட்டங்களின் கொடுப்பனவுகளது மொத்தத் தொகைக்கும் இடையிலான வித்தியாசமானது, வேலையாளருக்கு அத் தொழில்கொள்பவரால் செலுத்தப்படுதல் வேண்டும்.

 

சட்டத்தின் பிரிவு3 இன் (7) ஆம், (8) ஆம் உப பிரிவுகள் – சட்டத்திலிருந்தான விலக்களிப்பு –

(அ)  கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவானதும், தற்போது நடைமுறையிலிருப்பதும், வேதன அதிகரிப்பு பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதுமான ஒரு கூட்டு ஒப்பந்தத்தினால் அல்லது, அவ்வாறானதொரு கூட்டுஒப்பந்தத்தின் நீடிப்பினால் கட்டுப்படுத்தப்படும் வேலையாளொருவருக்கு, இச்சட்டத்தின் கீழான கொடுப்பனவுகள் ஏற்புடையதாக மாட்டாது.

(ஆ)2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவானதும் ஏதேனும் தரும நோக்கங்களுக்கானதுமான நிறுவனமொன்றில் அல்லது, மத வழிபாட்டிற்கெனப் பேணப்படும் அல்லது மத வழிபாட்டுடன் தொடர்புடைய ஏதேனும் நிறுவனமொன்றில் தொழிலிலமர்த்தப்பட்ட வேலையாளொருவருக்கு, இச்சட்டத்தின் கீழான கொடுப்பனவுகள் ஏற்புடையதாக மாட்டாது.

 

சட்டத்தின் பிரிவு9 – முதலாம் அல்லது இரண்டாம் கட்டத்தின் கீழ் அல்லது இரு கட்டங்களின் கீழ் வழங்கப்படத்தக்க கொடுப்பனவுகள் யாவும் வேலையாளொருவரது வேதனத்தின் அல்லது சம்பளத்தின் பாகமாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், பின்வரும் நன்மைகளுக்குரிய கொடுப்பனவுகளுக்கு உள்ளடக்கப்படுதலும் வேண்டும்:

·          ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஓய்வூதியம் (ஏதுமிருப்பின்) ஆகியவற்றுக்கான உதவுதொகைகள்

·          வருடாந்த விடுமுறை அல்லது லீவுக்கான வேதனம் அல்லது சம்பளம்

·          மேலதிக நேர வேலை ஊதியம்

·          மகப்பேற்று நன்மைக் கொடுப்பனவு

·          பணிக்கொடை

 

சட்டத்தின் பிரிவு13 – இச்சட்டத்தின் திகதியாகிய 2016 மார்ச், 23 ஆம் திகதிக்கு முன்னரானதும் 2015 மே 1 ஆம் திகதிக்குப் பின்னரானதுமான கொடுப்பனவுகளின் நிலுவைகள் யாவும் 2016 மார்ச் 23 ஆம் திகதியிலிருந்தான 12 மாத காலத்தினுள், சமமான மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளாக அல்லது அத்தவணைக் கொடுப்பனவுத் தொகைகளுக்கும் அதிகமானதொரு தவணைக் கொடுப்பனவுத் தொகைகளாக, தொழில்கொள்பவரால் வேலையாளருக்குச் செலுத்தி முடிக்கப்படுதல் வேண்டும்.

 

இச்சட்டத்தின் நோக்கங்களுக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக தொழில் ஆணையாளர் அதிபதி அவர்களே இருப்பார்.

இந்த அறிவித்தலானது, வேலையாளருக்கான வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படிக் கொடுப்பனவு தொடர்பான அடிப்படைத் தகவல்களையே வழங்குகிறது. எவ்வாறாயினும், கொடுப்பனவைச் செலுத்துதல், சட்டத்தின் கீழான விலக்களிப்புகள், தொழில்கொள்வோரால் பேணப்பட வேண்டிய பதிவேடுகள் மற்றும் இடாப்புகள் பற்றிய விபரங்கள், தகுதிவாய்ந்த அதிகாரியின் அதிகாரங்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சட்டத்தின் கீழான தவறுகளும் தண்டனைகளும், பொருள்கோடல்கள் போன்ற மற்றைய விடயங்களைப்பற்றி அறிந்து கொள்வதற்கு, 2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்கச் சட்டத்தை வாசித்து அறியும்படி வேண்டிக்கொள்கிறேன்.

 

மேலதிக விளக்கங்களுக்கு2586980, 2369084, 2368094, 2582608 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொழில் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.

 

 

டபிள்யு. டி. ஜே. செனவிரத்ன

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

 

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு

தொழிற் செயலகம்

கொழும்பு-5

08/04/2016

 

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016 06:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது